Friday 26 October 2012

பெண்கள் மத்தியில் பெண்ணியம்...


சமையலறைக்கு வாக்கப்பட்ட பெண்கள்- இப்போது அந்த சமையலறையை விவாகரத்து செய்ய துவங்கி வருகின்றனர். இது சரியா? தவறா? சரி என்றால்- யார்தான்  அடுத்து சமைப்பது? தவறென்றால்- ஏன் ஆண்களும் சமைக்க கூடாது? அது பெண்ணுக்கென ஒதுக்கப்பட்ட பகுதியா? இல்லை சமையல் செய்வதுதான் பெண்களின் தொழிலா? வீட்டு வேலைகளை பெண்கள்தான் செய்ய வேண்டுமா? கட்டிலறையும்- சமையலறையும் மட்டும் தான் பெண்களுக்கானதா?

இதைப்படித்ததும் இது என்ன முட்டாள்தனமான கேள்வியாக இருக்கின்றது என்றோ? இந்த கேள்விகளுக்கான எதிர்ப்பு பதில்களை உங்கள் மனம் தேட துவங்கியிருந்தாலோ- நீங்களும் ஒரு ஆணாதிக்கவாதி என்பதனை ஏற்றாக வேண்டும்.

ஆதியில் விவசாயத்தினை கண்டுபிடித்த பெண்களின் தன்மைகள் இன்று பல ஆக்கப்பூர்வ சிந்தனைகளை தனக்குள் பூட்டி வைத்திருக்கும் பெண்களின் தன்மைகளோடு ஒத்துப்போகின்றது.

பெண்ணியம், பெண் சுதந்திரம் குறித்த கருத்துகள் மேலோங்கி இருக்கும் இந்த காலகட்டத்தில் உண்மையில் பெண்கள் பெண்ணியம் குறித்து புரிதலில் இருக்கின்றனரா? பெண் சுதந்திரம் பெண்களிடம் எந்த அளவில் சென்றடைந்துள்ளது? இந்த கேள்விகளுக்கான பதில்களை ஒரு சிறு கள ஆய்வு மூலம் அறிந்து கொள்ள நினைத்தேன்.
இது எனது முதல் கள ஆய்வு என்பதால் என் வாழ்க்கையில் பயணித்து கொண்டு இருக்கும் ஐந்து பெண்களிடம் இருந்து இந்த ஆய்வினை துவங்குகிறேன்.அந்த ஐந்து பெண்களை பற்றிய அறிமுகமும் பின்புலமும் தெரிந்தால் மட்டுமே இந்த கள ஆய்வு முழுமை பெரும் எனவே முதலில் அவர்களை பற்றி -

முதல் பெண் பொன்மணி. வயது ௫௧(51). எனது தாய். 1980க்கு முன்பான சராசரி குடும்ப பெண்களின் நிலையில்தான், திருமணத்துக்கு முன் இருந்துள்ளார். ஆனால் திருமணத்திற்கு பின் நோய்வாய்பட்ட கணவரால் குடும்பத்திற்கு நிதி வசதி செய்ய முடியாத சூழ்நிலைலும் தனது இரு குழந்தைகளையும் கல்வி, திருமணம், வேலை என்று பரிணமிக்க செய்தவர். தற்சமயம் குடிசை தொழில் மேற்க்கொண்டுள்ளார்.

இரண்டாம் பெண் ரஞ்சனி. வயது ௩0(30). என் உடன்பிறந்த சகோதரி.உயர் பள்ளி கல்விக்கு பின் நான்கு வருட தனியார் நிறுவன பணி என்று இருந்தவர். திருமணத்திற்கு முன்பு வரை நிறைய ஏட்டு (ஏட்டோடு நின்றுவிட்டது) கவிதைகள் எழுதியுள்ளார். திருமணத்திற்கு பிறகு கணவரோடு சேர்ந்து தொழிலை நிர்வகிக்கும் திறமை கொண்டிருக்கிறார். அது போக வீட்டில் குழந்தைகளை கவனிக்கும் பொறுப்புடன்  சோறாக்கும் பணி என ஒரு வட்டத்திற்குள் சுதந்திரமாக வாழ்பவர்.

மூன்றாவது பெண் சுபஸ்ரீ.  வயது ௨௫ (25). என் உடன் பணியாற்றும் தோழி. பட்டபடிப்பு படித்தவர். மற்றவர்களுக்கு உதவக்கூடிய மனபக்குவம் உள்ளவர்.பொது விசயங்களை அறிந்துகொள்ளும் ஆர்வம் கொண்டவர். தனியார் நிறுவனத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றுகிறார்.

நான்காவது பெண் சரவணபிரியா. வயது ௧௭(17). என் உடன்பிறவா சகோதரியின் மகள் . இப்போதைய கல்வியல் முறையில் பள்ளி கல்வி பயின்று வருபவர்.

ஐந்தாவது பெண் நாகம்மாள். வயது ௫௭(57). எனது நண்பனின் தாய். எனக்கு பெரியம்மா முறைதான் வரும். படித்தவர். அரசு பள்ளியில் உதவி தலைமை ஆசிரியையாக பணியாற்றுகிறார். நல்ல சிந்தனைவாதி. ஆனால் அந்த சிந்தனைகளை அவர் பின்பற்றும் மதத்தில் முடக்கிவிடுகிறார் என்ற வருத்தம் எனக்கு இவர் மேல் உண்டு. (இவரிடம் பெண்களின் ஆடை குறித்து பேசுகையில் சில விவாதங்களும் தொடர்ந்தன. அதனை தனி இடுகையாக்கி பதிவிடுகிறேன்)

இவர்களிடம் நான் எழுப்பிய கேள்விகளும் அதற்க்கு அவர்கள் வழங்கிய பதில்களும்:

கேள்வி ௧. பெண் என்றால் எப்படி இருக்க வேண்டும், எப்படி நடந்து கொள்ளவேண்டும் என்று எதிர்பார்கின்றீர்கள்?

பொன்மணி: கல்யாணம் ஆகுறதுக்கு முன்னாடி அப்பா அம்மா பேச்ச கேக்கானும், கல்யாணம் ஆனதுக்கு அப்பறம் வீட்டுக்காரர் பேச்ச கேக்கணும். குடும்ப பொருப்பா இருக்கணும். இதுதான் ஒரு பெண்ணுக்கு லச்சணம்.

ரஞ்சனி: பொன்னு பொன்னாவே இருக்கணும் ஆணா மாற முயற்ச்சிக்க கூடாது. எவ்வளவு தான் சரி சமமா இருந்தாலும் முக்கால் வாசி பெண்ணாதான் இருக்கணும்.முழுசா ஆணா மாற முயற்ச்சிக்க கூடாது.அப்போ தான் வீட்டுக்கு நல்லது.


சுபஸ்ரீ: பெண்ணுக்கு உண்டான குணத்தோட இருக்கனும். அடக்கம்- இந்த அச்சம்- மடம்- நாணம் அப்டிலாம் சொல்வாங்கள- அதோட கண்டிப்பா இருக்கனும். இந்த காலத்துல உள்ள பெண்கள் வந்து நல்லா படிச்சி எல்லா துறைலயும் முன்னேறிட்டு வர்ராங்க. கண்டிப்பா பெண்கள் எல்லா துறைலயும் சாதிக்கணும்.

சரவண பிரியா: ஒரு பொண்ணுன அவங்களுக்கு பிடிச்ச மாதிரி இருக்கணும். அப்பறம் அவங்க அப்பா அம்மாக்கு பிடிச்ச மாதிரி, (ஏதோ யோசித்து) ம்ம்... முதல்ல அவங்க அப்பா அம்மாக்கு பிடிச்ச மாதிரி அப்பறம் அவங்களுக்கு பிடிச்ச மாதிரி இருந்துக்கலாம்.

நாகம்மாள்: பருவப்பெண்'ன அம்மா அப்பாவுக்கு அடங்கிய பெண்.மனைவி என்றால் கணவனுக்கு கட்டுப்பட்ட, கட்டுப்பட்ட என்றால் அன்பிற்கு கட்டுப்பட்ட பெண்.மாமியார் மாமனாருக்கு சிறந்த மருமகளா, குழந்தைகளுக்கு சிறந்த தாயாக, முதிர் வயதாக இருக்கும் போது அனுபவத்தினை சொல்ல கூடிய பெண்ணாக இருக்க வேண்டும். அனுபவத்தின் மூலம் மற்றவர்களை பயிற்ருவிக்க கூடிய பெண்ணாக இருக்க வேண்டும். எந்த இடத்திலும் கற்பு நிலை தவற கூடாது.

கேள்வி ௨. தந்தை பெரியாரை பற்றி உங்களின் கருத்து என்ன?

பொன்மணி: பெரியார் ஒவ்வொன்னு சொல்றத நம்பலாம். ஆனா சாமி இல்லைன்னு சொல்லறத நம்ப முடியாது.

ரஞ்சனி: இது எதுக்கு இந்த கேள்வி? ம்ம் பெரியார பத்தியா அவர் இப்ப இருந்துருக்கணும்,நிறைய பெர திருத்த வேண்டிருக்கு.

சுபஸ்ரீ: பெரியார் வந்து சமுதாயத்த நல்லா சீர் திருத்தி இருக்கார். அந்த விசயங்கள்ள அவர பாராட்டனும். ஆனா- கடவுள் இல்லைனு கடவுள் கிடையாதுனு சொல்லீர்க்கார் அத மட்டும் ஏத்துக்க முடியாது.பெண்கள் முன்னேற்றத்திற்காக நிறைய போராடியிருக்கார். அதல்லாம் accept பண்ணிக்கலாம். மது ஒழிப்பு- மாதிரி நிறைய சமுதாய விசயங்கள்ளாம் செஞ்சிருக்கார். அதல்லாம் ஏத்துக்கலாம். ஆனா இந்த கடவுள் கிடையாதுனு சொல்ரத மட்டும் ஏத்துக்க முடியாது.

சரவண பிரியா: அவர பத்தி ஒன்னுமே தெரியாது. (சற்று குழப்பமாக) அவங்க தோப்புல கள்ளு இது பண்ணுவாங்க. அந்த தோப்ப குத்தகை இது மாதிரி விட்டு இருப்பாங்க. கள் எடுக்க கூடாதுனு சொல்லிடுவாங்க உடனே நைட்டோட நைட்டா அத அவர் வேட்டிடுவாரு.அப்பறம் ரொம்ப நல்லவரு, வல்லவரு அவ்வளவுதான்.

நாகம்மாள்: தெரியாதுடா.. (சிறுது நேர சிந்தனைக்கு பின்) அவரேன்னா'ன அவர் ஒரு நாத்திகர். ஆனா உள்ளுக்குள்ள பிள்ளையார வச்சி வணங்குனாராம்.அது எந்த அளவு உண்மைன்னு தெரியல. தீண்டாமைக்கு எதிரா போராடுனாரு. அப்பறம் அவங்க மனைவியோ தங்கையோ நாகம்மாள்'னு மது ஒழிப்பு போராட்டத்துக்கு ரொம்ப இது பண்ணாங்க. பெரியாரு பத்தி பெண் சுதந்திரத்துக்காக வராதுல?.

கேள்வி ௩. தற்ச்சமயம் நீங்கள் அறிந்து கொண்ட சமூக நிகழ்வு எது?

பொன்மணி: விலைவாசி, விலைவாசி எல்லாம் பயங்கரமா கூடிருக்கு. வருமானத்துக்கு மேல செலவு. அந்த அளவுக்கு விலைவாசி கூடிருக்கு.

ரஞ்சனி: கிரானைட் முறைகேடுக்காக வந்து, அஸ்வந்மிஸ்ரா அவங்க கட்டிடத்த முழுத இடிச்சிட்டாரு. அவங்க முறைகேடா ஆக்கிரமிச்சி கட்டுன கட்டிடத்த இடிச்சிட்டாரு. அத இடிக்காம அத அரசு உபயோகத்துக்கு வச்சி இருந்திருக்கலாம்.அத இடிச்சி தர மட்டமாக்குனதுக்கு, அவங்கே அத ஆக்கிரமிச்சி கட்டிட்டாய்ங்கே, அரசு உபயோகத்துக்கு வச்சிருக்கலாம்.

அப்பறம் பிரான்சு நாட்டுல ஒரு வழக்கறிஞர், அவங்க கோர்ட்ல ஒரு கருத்து வச்சிருக்கார், என்னனா, சிறைல இருக்குற கைதிகளுக்குளாம், புத்தகம் குடுத்து படிக்க வச்சி, அந்த புத்தகத்த படிச்சி என்ன புரிஞ்சிகிட்டாங்கனு பரிச்சை மாதிரி வச்சி அதுல அவங்க சொல்லற பதில வச்சி அவங்கள வேகமா வெளிய விடலாம்னு சொல்லி இருக்கார். இப்ப அத அங்க பின்பற்றுறாங்க, அதே மாதிரி இங்கயும் கொண்டுவந்தா நல்லா இருக்கும்..



சுபஸ்ரீ: அது மாதிரி…. நிறைய இருக்கு.. ஆனா இப்ப எதும் ஞாபகம் இல்ல. ம்ம்… (பக்கத்தில் இருந்து ஒருவர் எடுத்துக்கொடுக்க- தொடர்கிறார்) கூடங்குளம் அத பத்தி தெரிஞ்சிக்கிட்டேன். ஒரு பக்கத்துல இருக்கிறவங்க அத திறக்க கூடாது, கழிவுலாம் சேர்ந்தா கடல் நீர் கெட்டுப்போய்டும்னு சொல்ராங்க. இன்னொரு பக்கம் அத திறந்தா தான் மின்சாரம் தட்டுப்பாட நீக்க முடியும். அத ஏத்துக்க மாட்றாங்க. மின்சாரம் தேவைப்படுறதுனால கழிவ கடல்ல கலக்காத மாதிரி வேறு வழில கொண்டு போன கடல் தண்ணிக்கு ஆபத்து இல்லாம இருக்க புது முயற்சி செஞ்சி அத பண்ணலாம். கூடங்குளம் அணு உலை வந்து கண்டிப்பா வேணும்.

சரவண பிரியா: நிறைய ஸ்கூல் ஸ்டூடண்ட்ஸ் இறந்துட்டு இருக்காங்க,விலாஷா தேஷ்முக் அப்படிங்குற முதல்வர் ஒருத்தர் இறந்துட்டாங்க. பிகார்ல ஏதோ ப்ராப்ளம்னு சொல்லிட்டு இருந்தாங்க.

நாகம்மாள்:இப்பதான் தீவிரவாதம் வன்முறை இருக்கு. தீவிரவாதம் நமக்குள்ள தான் இருக்கு. அப்போ என்ன செய்யல, பெற்றோரோ ஆசிரியரோ நல்ல பயிற்சி கொடுக்காததால தான் இப்டி இருக்கு. நம்மல்ல ஒரு ஆளு தான் இப்படி வர்ரது. அந்த குழந்தைகளுக்கு என்ன தேவை அப்படின்னு புரிந்து அவங்க மன உணர்வுகள புரிந்து கொண்டு நடக்காதநாலா தான். பெற்றோரா இருக்கட்டும் ஆசிரியரா இருக்கட்டும் சமூகமா இருக்கட்டும் அந்த குழந்தைகளிடம் புரிந்து நடந்து கொள்ளாததால தான் விரோதிகளா மாறுறாங்க.

கேள்வி ௪.  அருந்ததிராய் என்ற பெண் யாரென்று உங்களுக்கு தெரியுமா?

பொன்மணி: அருந்ததிராய்'ன யாரு. இந்த இதுக்காக போராடுனவங்க தான. இந்த கூடன்குள இதுல இதா இருந்த பொண்ணு தான!?

ரஞ்சனி: அருந்ததி ராய்... கேள்வி பட்டிருக்கேன். அனா யாருன்னு தெரியலையே, கரைக்டா தெரியல.. 


சுபஸ்ரீ: தெரியாது.. ம்..கும். தெரியல.

சரவண பிரியா: ம்ம்.. தெரியல,அருந்ததி படம்தான் தெரியும். அருந்ததிராய் யாருனு தெரியல.

நாகம்மாள்: தெரியலையேபா.. அருந்ததிராய்ன யாரு?




கேள்வி ௫. உங்களின் பொழுது போக்கு என்ன?

பொன்மணி: வீட்டுல வேலை பாக்குறது.டிவி பாக்குறது. டிவில நாடகம் பாப்போம். ஜோக் ஏதாவது பாப்போம்.

ரஞ்சனி: புத்தகம் படிப்பேன், புத்தகம்ன, பத்திரிகை மாத இதழ், 

சுபஸ்ரீ: பத்திரிகை magazine-லாம் படிப்பேன். டிவி பாக்றது. NEWS கேக்றது Song கேக்றது. இதல்லாம்தான்.

சரவண பிரியா: மியுசிக் கேக்குறது, ஹேன்ட் வொர்க் பண்றது, டிவில ம்யுசிக் ப்ரோக்ராம், சீரியல் பார்ப்பேன். புதிய தலைமுறைல எப்பயாவது நியூஸ் பாப்பேன்.

நாகம்மாள்: நான் பைபிள் ரீடிங்க பண்ணனும்னு நினைப்பேன். கடவுளோட செயல்கள்ல ஈடுபடுவேன்.

இவர்களின் பதில்களில் இருந்து நாம் அறிந்து கொள்ள வேண்டியது:

பொன்மணி அவர்களின் பதிலில் பெண்கள் எந்த காலத்திலும் யாராவது ஒருவரின் பேச்சை கேட்டு  செயல்பட வேண்டும் என்ற கருத்தே மேலோங்கி உள்ளது. பெண்களிடமும் சுய சிந்தனை உண்டு என்பது இவர் போன்ற பெண்களிடம் இருந்து மறைத்தே வைக்கப்பட்டுள்ளது. அதற்க்கான காரணம் அவரின் பின்புலம்தான். ஆண் பிள்ளைகளுக்கு ஒரு உணவு இட்டால் பெண் பிள்ளைகளுக்கு வேறு (பழையது) உணவினை வழங்க கூடிய குடும்ப பின்னணியில் பிறந்தவர். தான் வளர்ந்த விதமே இன்றும் அவரை சிந்திக்க விடாமல் தடுத்துள்ளது. சமூக நிகழ்வு என்றாலும் தன் குடும்பத்துக்கு இடையூறான விலைவாசி உயர்வு மட்டுமே யோசிக்க தெரிந்த வட்டத்துக்குள் வாழ்கிறார். பெரியாரது கடவுள் மறுப்பு கொள்கை மட்டுமே இவருக்கு தெரிந்துள்ளது. அருந்ததிராய் பற்றி இவருக்கு தெரிந்திருக்க, தெரிந்து கொள்ளவும் வாய்ப்பில்லை. ஏனெனில் இவரின் பொழுது போக்கு தொலைகாட்சியில் தொடர் நாடகங்கள் பார்ப்பது. இதை விடுத்து இவரை சற்று வெளி உலக சிந்தனைக்கு கொண்டு வர வேண்டும்.

ரஞ்சனி அவர்களின் பதிலில் அவர் பெண் ஆணாக மாறுவது என்று சற்று குழப்பமாகவே உள்ளார். பெண்கள்  ஆண்களாக மாற முயற்சி செய்கிறார்கள் என தவறான நோக்கு இவரிடம். பெரியார் பற்றி செவி வழியாக கேட்டே பெரியார் பற்றி இவ்வளவு ஆழமாக பேசுகிறார், அவரை படித்தால் இன்னும் இவரிடம் நிறைய மாற்றம் உண்டாகும். தான் படிக்கும் மாத, தினசரி இதழ்களில் உள்ளதை ஆக்கபூர்வமாக சிந்திக்கிறார். உண்மையில் குடும்ப வட்டத்தில் இருந்து சற்று வெளி வந்து சமூகத்திற்கான இவரது தேவை, உண்மையில் தேவை. அருந்ததி ராய் பற்றி தெரியவில்லை என்றாலும் அவரளவுக்கு சமூக பிரச்சனைகளை பற்றியும் அதற்க்கான தீர்வுகள் பற்றியும் சிந்திக்கிறார். என் வேண்டுகோளை ஏற்று பத்து நிமிடத்தில் ஒரு சமூக கவிதையை சித்தித்து எழுதிவிட்டார். (ஆனந்த விகடனுக்கு இதனை அனுப்பியுள்ளேன், அங்கு பிரசுரித்தாலும் இல்லை என்றாலும், தமிழ்மணி வலைப்பூவில் அக்கவிதை சில தினங்களில் மலரும்)


சுபஸ்ரீ அவர்களின் பதிலில் இருந்து பெண்கள் எல்லா துறைகளிலும் முன்னேற வேண்டும் என்ற எண்ணம் இவரிடம் தென்பட்டாலும்- என்றோ- யாரோ சொல்லிக்கொடுத்த அச்சம் மடம் நாணம் அடக்கம் போன்றவற்றால் தனக்கான பாதையில் இருந்து சற்று விலகுகின்றார். மற்ற நான்கு பெண்களும் சொல்லாத பெரியார் பற்றிய கருத்தினை கூறியதற்கு கண்டிப்பாக இவரை பாராட்டியே ஆக வேண்டும். பெண் முன்னேற்றத்திற்கு பெரியார் முன்னெடுத்த போராட்டங்களை இவர் போன்ற வெளி இடங்களுக்கு பணிக்கு செல்லும் பெண்கள் அறிந்து வைத்திருப்பதே அப்போராட்டங்களுக்கான வெற்றி. கூடங்குளத்தினைப் பற்றி தான் அறிந்த விசயங்களை தீர்வுகளோடு பேசியுள்ளார். இன்னும் அவர் அதைனைப்பற்றிய உண்மைகளை அறிந்து கொண்டு அதனைப்பற்றி தீர்வுகளை புதுமையாக படைக்க வேண்டும் என்பதே என் ஆசை. அவர் படிக்கும் பத்திரிகைகளின் பிரதிபலிப்பு அவர் பேச்சில் தெரிகின்றது. அருந்ததிராய் பற்றி இவரும் அறிந்திருக்கவில்லை.

சரவண பிரியா அவர்களின் பதிலில் அதே தோணியே தெரிகிறது. பெண் முதலில் அப்பா அம்மாவிற்கும் பிறகே தனக்கு பிடித்த மாதிரி நடந்து கொள்ள வேண்டும் என நினைக்கிறார். பள்ளிகளிலும் பெண்ணியம் குறித்த விழிப்புணர்வு இல்லை என்பது அம்பலமாகிறது. பெரியாரை பற்றி தான் எட்டாம் வகுப்பில் மனப்பாடம் செய்த பாடத்தினை சற்றே தவறாகவே கூறியுள்ளார். அருந்ததிராய் போன்ற வாழும் பெண்களை பற்றிய அறிவினையும் பள்ளிகூடங்கள் மாணவர்களுக்கு புகுட்ட வேண்டும். தொலைகாட்ச்சியில் செய்தி பார்க்கிறார் அதனால் ஓரளவு சமூக நிகழ்வுகளை தெரிந்து வைத்துள்ளார். இது பாராட்டுக்குரியது. இப்போதுள்ள பெரும்பாலான பள்ளிகள் சமூக விழிப்புணர்வு குறித்த அறிவினை கற்ப்பிக்காமல் வெறும் பணம் சம்பாதிக்கும் வழிகளை மட்டும் சொல்லிக் கொடுக்கிறார்கள். இதனால் என்ன பயன் என்று எனக்கு புரியவில்லை. பள்ளிகளில் செய்தி வகுப்பு என்ற வகுப்பு ஒன்றிற்கு நேரம் ஒதுக்கி அதில் மாணவர்களிடம் ஆரோக்கிய விவாதங்களை ஊக்குவிக்க வேண்டும். சமூக அறிவில்லாமல் அவர்கள்  பணி தேடும் காலங்களில் அவர்களின் வாழ்க்கையில் ஏற்ப்படும் சமூக பிரச்சனைகளில் இருந்து அவர்களை காக்க இது போன்ற வகுப்புகள் அவசியம். (இதற்க்கு ஆண் பெண் விதிவிலக்கல்ல).

நாகம்மாள் அவர்களின் பதில் சற்று சிந்திக்க வைத்தாலும் அது மதம் குறித்த விடயத்தில் சிக்கியே உள்ளது. "பெண்களை வெறும் குடும்ப நிர்வாகிகளாகவே வைத்திருக்க வேண்டுமா?" என்பதே என் கேள்வி. பெண் என்பவள் ஆணின் விலா எலும்பில் இருந்து கடவுளால் வடிவமைக்கபட்டவள் எனவே ஆணுக்கு பின்னே பெண் என்று இவர் படித்த பைபிள் இவரை இவ்வளவே சிந்திக்க வைக்கும். பெரியாரை பற்றி ஏதும் தெரியாது என்று சொல்லி பிறகு சில கருத்துகளையும் சொன்னார். நல்லது. ஆனால் இறுதியில் பெரியார் பெண்ணியம் பற்றி என்ன சொல்லியிருக்கிறார். அவர் ஏதும் சொல்லவில்லையே என்று சொதப்பியுள்ளார். இதில் இருந்து நான் தெரிந்து கொண்டது பெண்ணியம் குறித்து பெரியார் கூறிய கருத்துகளை சமூக கோமாளிகள் பலர்,  பெண்கள் வசம் செல்லாமல் இருக்க நிறைய கோமாளித்தனங்கள் செய்துள்ளனர். அக்காலத்தில் பெண்கள்  ஆர்வம் காட்டிய கடவுள் நம்பிக்கை மீது பெரியாரது கடவுள் மறுப்பு கொள்கைகளை கொண்டுவந்து போட்டு அதை தவறென்று அவர்களின் மூளைக்குள் புகுத்தியுள்ளனர். பெரியாரது பெண்ணிய கருத்துகள் பெண்களிடம் செல்லாமல் மிக நேர்த்தியாக காய் நகர்த்தியுள்ளனர். அருந்ததிராய் பற்றி தெரியவில்லை. சமூக நிகழ்வுகளை சொல்லி அதற்க்கு தீர்வும் சொல்லியுள்ளார். இத்தனைக்கும் இவர் பைபிள் படிப்பதை மட்டுமே பொழுது போக்காக கொண்டு தன் சுய சிந்தனையால் பல நல்ல விசயங்களை சிந்திக்கிறார். இன்னும் இவர் இந்த மத மயக்கத்தில் இருந்து மீண்டால் இன்னொரு பெண் சமூக போராளி நமக்கு கிடைப்பது உறுதியே. 


பொதுவாக இந்த ஐந்து பெண்களின் பதில்களில் இருந்து இன்னும் பெண்ணியம், பெண் சுதந்திரம் பற்றிய தெளிவு என்பதனை விட பெண் சுதந்திரம் பற்றிய தகவல் கூட இன்னும் பெரும்பாலான பெண்களுக்கு கிடைக்கவில்லை என்பது அப்பட்டமாகிறது.. இப்படி ஒரு சரார் என்றால் மற்றொரு பக்கம் வித வதமாக தங்களை அலங்கரித்துக் கொள்வதையும், தங்களின் ஆடைகளை குறைத்துக்கொள்வதையுமே தங்களுக்கான சுதந்திரம் என தவறாக புரிந்து கொண்ட பெண்களும் உள்ளனர். வித விதமாக தங்களை அலங்கரித்துக் கொண்டு மேலும் மேலும் ஆண்களுக்கான போக பொருளாகவே தங்களை தாங்களே சித்தரித்துக்கொள்கின்றார்களே தவிர, ஆண்களுக்கு கீழான பொருளாக காட்டிக்கொள்கிறார்களே தவிர இதில் எந்த வித சுதந்திரமும் இல்லை என்பதை உணராமல் உள்ளனர்.

பெண்கள் தங்களின் உள்ளாடைகளால் தங்களை மேலும் மேலும் பெண் என்ற ஒரு வடிவமைப்பினை ஏற்றுக்கொள்கின்றார்கள்- அதனை தவிர்க்க வேண்டும் என்ற பெரியாரின் கருத்துகளுக்கு வக்கிரமான விமர்சனம் செய்யும் ஆண்கள் இன்றும் உண்டு. இதுவே பெண்களுக்கு இந்த சமூகம் கொடுத்திருக்க கூடிய இடம். பெண் என்றால் வக்கிரம் என்ற நிலையிலேயே பல மனிதர்கள் உலாவுகின்றனர். ஒரு பெண் ஒரு ஆணிடம் பேசுவதை கூட தவறாக சித்தரித்து தண்டனை தரக்கூடிய கல்லூரிகளும் இன்றும் இருக்கின்றன. இது தான் பெண்ணியம் சென்ற ஆழம்.

நான் கண்ட வரை உண்மையில் சமூக விசயங்களை தெரிந்து கொள்ளும் ஆர்வமும், அதனை வித்தியாசமாக சிந்திக்கும் ஆற்றலும், புதுமையான தீர்வுகளை ஆராயும் திறமையும் பெரும்பாலான பெண்களிடமும் உள்ளது. என்ன.., அதையெல்லாம் தெரிந்து கொள்ள கூட விடாத நிலையில் இந்த சமூகமும், அது கற்றுக்கொடுத்துள்ள இந்த அறியாமை என்ற பாடமும் சிறப்பாக பங்காற்றுகின்றன. சுபஸ்ரீ அவர்களுக்கு அவர்களுக்கு முன்பு அவரைப் போல பணிக்கு செல்லும் வேறு இரு பெண்களிடம் பெண்ணியம் குறித்து பேச நேரம் ஒதுக்குங்கள் என்று இரு மாதங்களுக்கு மேலாக கேட்டுக்கொண்டே இருந்தேன். தனிப்பட்ட விசயங்கள் பற்றி எல்லாம் பேசியவர்கள் இது பற்றி பேச மட்டும் தயங்கி காலம் தாழ்த்தினர். வீட்டில் இருந்து வெளியில் சென்று பணி செய்து திரும்பும் பெண்கள் கூட இதை பற்றி பேச தயங்கும் நிலையிலேயே இன்றைய பெண்ணியம் உள்ளது என்பது வருத்தமானதே.

ஒரு சமூக பெண் எழுத்தாளரை யாரென்று அறிந்திருக்காத நிலையில் உள்ள இக்கால பெண்களின் பொழுதுபோக்கு தொலைக்காட்சி நாடகங்களிலேயே தொலைந்துவிடுகின்றது. உண்மையில் இன்றைய சமூகம் பெண்களை சமூக விசயங்களின் பக்கம் திரும்ப விடாமல் சிறப்பான சேவையாற்றுகின்றன. ஊடகங்கள் கூட பெண்களுக்கான சிறப்பு பகுதி என்று சொல்லி மீண்டும் மீண்டும் அழகு கலை; சமையல் குறிப்பு; என்று போட்டுத் திணிக்கின்றனர்.

பெண்களுக்கான சட்ட சேவை மையம் என்ற தொண்டு நிறுவனத்தில் பணி புரியும்  செல்வராணி என்ற பெண் ஒருவருடன் கலந்துரையாடும் வாய்ப்பு கிடைத்தது. பெண்கள் நகர் மன்றத் தலைவராக இருக்கின்றார்கள்; இது பெண்களுக்கான முன்னேற்றம்தானே என்று நினைத்துக்கொண்டிருக்கின்றோம். ஆனால் இன்று வரை பெரும்பாலான பெண் நகர் மன்றத் தலைவர்களின் கணவர்களே ஆவணங்களில் கையெழுத்திடுகின்றனர். கூட்டங்களிலும் கூட பெண் உறுப்பினர்கள் கலந்து கொள்ளவது தவிர்க்கப்பட்டு வருகின்றது. இந்த துறையே இப்படி என்றால் இன்னும் எத்தனை துறைகளில் எத்தனை பெண்கள் என்ன நிலைகளில் இருக்கின்றனரோ!!  இதை தானா நாம் பெண் சுதந்திரம் என்கின்றோம்?? பெண்கள் இந்த நூற்றாண்டிலும் கூட இரண்டாம் தரமாகவே நடத்தப்படுகின்றனர் என்பது கேவலமான உண்மை.


எதிர்ப்பு கேள்விகளை எதிர் நோக்கி-
சு.ரகுநாத்
thamizhmani2012@gmail.com

7 comments:

  1. jathiya kattumanathil irunthu samugam methuvaga milvathu mathiri pengalum milvargal endu nambuvom nall muyarchi vallthukal

    ReplyDelete
    Replies
    1. நிச்சயம் மீண்டு வருவார்கள்.. மிக்க நன்றி அண்ணா...

      Delete
  2. second picture very supppppppppppppper

    ReplyDelete
    Replies
    1. நன்றி அண்ணா.. கூகுள் தேடல் பகுதிக்கும் நன்றி :-)

      Delete
  3. நல்ல முயற்சி... ஆய்வு களம் அருமை.பேட்டியை அப்படியே வெளியிடாமல் தகவல்களின் சராம்சத்தை பதிவாக வெளியிட்டிருக்கலாம்.பதிவின் நீளம்த்தை குறைத்திருக்கலாம்.மற்றபடி நல்ல துவக்கம்..
    அ.தமிழ்ச்செல்வன்

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி அண்ணா.. நானும் பேட்டியை வெளியிட வேண்டாம் என்றுதான் நினைத்தேன்- ஆனால் இந்த பதிவிற்கு பெண்களின் பங்களிப்பினை வெளிப்படுத்தவே- பேட்டியையும் வெளியிட்டேன். ஆனால் இந்த பதிவு சற்று நீளம்தான்.

      இனி இந்த விசயத்தில் கவனம் செலுத்துகிறேன். நன்றி அண்ணா

      Delete
  4. அருமை அண்ணா

    ReplyDelete